search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாம்"

    மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் கலந்துகொண்ட யானைகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிவதற்காக ரத்த பரிசோதனை நடைபெற்றது. #RejuvenationCamp #Elephants
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன.

    முகாமில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையினர் யானைகளை தினசரி காலை மாலை 2 வேளையும் மருத்துவ பரிசோதனை செய்து அவைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முகாமில் கலந்துகொண்ட யானைகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிவதற்காக ரத்த பரிசோதனை நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியம் தலைமையில் உதவி மருத்துவர்கள் பரமேஸ்வரன், பிரபு மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் உள்ள 28 யானைகளின் ரத்தத்தை சேகரித்தனர்.

    சேகரித்த ரத்த மாதிரிகள் கோவை அரசு கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை கிடைத்த பின்னர் யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    முகாமில் கலந்து கொண்ட யானைகளில் திருவையாறு தருமபுர ஆதீனம் பஞ்சநதீஸ்வரசுவாமி கோவில் யானை தர்மாம்பாள்,புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமி ஆகிய யானைகள் கால்களில் வெடிப்பு, சிறுபுண் மற்றும் அரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபயிற்சியின்போது இந்த யானைகள் மிகவும் அவதிப்பட்டு வந்தன. இதற்காக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக்குழுவினரால் யானைகளுக்கு பாதக்குளியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #RejuvenationCamp #Elephants #Mettupalayam
     


    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் நேற்று தொடங்கிய யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமில் காலை, மாலை நேரத்தில் யானைகள் உற்சாகத்துடன் நடைபயிற்சியை மேற்கொள்கின்றன. #Elephants #Rejuvenationcamp
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது.

    தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் முகாம் நடைபெற்று வருகின்து. நேற்று தொடங்கிய முகாமில் மொத்தம் 27 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன.

    முகாமில் கலந்து கொண்ட யானைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன. குளிர்காற்று வீசும் காலை வேளை மற்றும் மாலை நேரத்தில் யானைகள் உற்சாகத்துடன் நடைபயிற்சியை மேற்கொள்கின்றன. வயது உடல் எடைக்கேற்றாற்போல் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. நடைபயிற்சிக்குப்பின்னர் பாகன்கள் யானைகளை ‌ஷவர் மேடை மற்றும் குளியல் மேடையில் குளிக்க வைக்கின்றனர்.

    யானைகள் நீண்ட நேரம் குளியல் மேடையில் ஆனந்தக்குளியல் இடுகின்றன. தண்ணீரை தும்பிக்கையால் தனது உடல்மீது வாரியிறைத்து விளையாடுகின்றன. குளியலுக்குப்பின்னர் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அரிசி சாதம், கொள்ளு, பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூரணம் பயோபூஸ்ட் ஆகியவை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் யானைகள் தீவன மேடைக்குச்சென்று தீவனங்களை தும்பிக்கையால் எடுத்துச்செல்கிறது. யானைகள் தனது உடலில் மண்ணை வாரியிறைத்து தங்களது ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகின்றன.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமியும், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவில் யானை அபயாம்பிகையும் ஒரு வருடத்துக்கு பின் சந்தித்ததால் ஒன்றுக்கு ஒன்று துதிக்கையால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

    காட்டுயானைகள் முகாமிற்குள் புகுந்துவிடாமல் தடுக்க மாலை நேரத்தில் சூரிய மின்வேலி, தொங்கு மின்வேலிகள் இயக்கப்படுகின்றது. சீரியல் பல்புகளும் எரிய வைக்கப்படுகின்றன.  #Elephants #Rejuvenationcamp

    ×